Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரம்; அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: சட்டப்பேரவை தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என கண்டிக்க முடிவு

சென்னை: கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரம் பூதாகரமான நிலையில் அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை இன்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரிடம் சட்டப்பேரவை தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என கண்டிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், பொதுமக்களுக்கு குடிநீர் கூட வழங்க ஏற்பாடு செய்யாமல் கண்டுகொள்ளாமல் விட்டதாலும், கூட்ட நெரிசல் நேரத்தில் பொதுமக்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளன. அதேநேரத்தில், 41 பேர் பலியான சம்பவத்துக்கு நடிகர் விஜய், இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு வெளியில் வராமலும், நிர்வாகிகள், முக்கிய தலைவர்களை சந்திக்காமல் இருந்து வருகிறார். அதேநேரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவான நிலையை பாஜக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால் விஜயை வைத்து ஆதாயம் அடைய முடியுமா என்று அக்கட்சி யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான், மணிப்பூர் கலவரம், உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் நடைபெற்ற சம்பவம், குஜராத்தில் பாலம் உடைந்து பலர் உயிரிழந்த சம்பவம் என எந்த சம்பவத்துக்கும் ஆட்களை அனுப்பாமல், கரூர் சம்பவத்துக்கு மட்டும் பாஜக எம்பிக்கள் குழுவை அனுப்பி வைத்ததே இதற்கு சாட்சி என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தநிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை 8.45 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமித்ஷா அழைப்பின் பேரிலேயே அவர் டெல்லி செல்வதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையும், தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனாவும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜூனா இன்று உத்தரகாண்டில் நடைபெறும் கூடைப்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக 5 நாட்களுக்கு முன்னதாக டெல்லி சென்று தங்கியுள்ளார். இதனால் அண்ணாமலையும், ஆதவும் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாஜக மற்றும் தவெகவை கூட்டணியில் இழுப்பது அல்லது திமுக கூட்டணிக்கு எதிராக விஜயை தீவிரமாக களம் இறக்குவது என்று திட்டமிடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிராகவும் அண்ணாமலை பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவரை அழைத்து எச்சரிக்கை செய்யவும் அமித்ஷா திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் அவரை அழைத்துப் பேசி எச்சரிக்கை செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.