சென்னை: நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயுமான கீதா வயது மூப்பு காரணமாக காலமானார். இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. ரேஷன் கடையில் வழங்க கூடிய அனைத்து பொருட்களும் ஒன்றிய அரசு வழங்குவது தான். ஜிஎஸ்டி என்பது ஒன்றிய அரசு விதிப்பது அல்ல. மாநில நிதி அமைச்சர்கள் தான் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழு தான், யார் யாருக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பதை முடிவெடுத்து அறிவிப்பார்கள். அந்த அடிப்படையில் தான் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர்.
இதில், கடைசியாக, ஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு பல்வேறு சுமைகள் இருக்கிறது என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கைகள் வந்தததன் அடிப்படையில், 28 சதவீத்தை எடுத்து விட்டனர். பின்னர் 12 சதவீதத்தில், கிட்டத்தட்ட 90 சதவீத பொருட்களின் வரி விதிப்பை 5 சதவீதமாக குறைத்து விட்டனர். 5 சதவீதம் கொண்ட சில பொருட்களுக்கு 0 சதவீதமாக வரியை குறைத்து விட்டனர். இதில் டிவி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு எல்லாம் 28 சதவீதம் வரி இருந்தது. இப்போது அதை 10 சதவீதமாக குறைத்து விட்டனர். இதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறதா? இல்லையா. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். 50 சதவீத பங்கு மாநிலத்துக்கு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் மீதி இருக்ககக்கூடிய தொகையில் இருந்து தான் தேசிய நெடுஞ்சாலைகள் போட வேண்டும். இதில் இருந்து தான், பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ரேசன் பொருட்களை இலவசமாக கொடுக்கிறது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தான் நாடு முன்னேறும்.நீங்கள் தலைவரா? அண்ணாமலை தலைவரா? என்ற விமர்சனங்கள் பொது வெளியில் எழுந்துள்ளதே என்ற கேட்கிறீர்கள். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் கேட்கிற கேள்வியே சரியில்லை. நீங்கள் தலைவரா? அவர் தலைவரா என்று கேட்பது எங்களுக்குள் சண்டையை மூட்டுவது போன்று உள்ளது. இப்படி யாரிடமும் கேட்காதீர்கள். எல்லா வரிகளிலும் 50 சதவீத பங்கு தமிழ்நாட்டுக்கு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. வரும் 6ம்தேதி ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். சென்னையில் நடைபெற உள்ள அனைத்து போராட்டங்களுக்கும் இனி மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமை ஏற்று நடத்த போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.