அண்ணாமலை வாயிலேயே உண்மையை சொல்ல வைத்த சாட்சிகாரர் விஜய் பிரசாரத்தில் சதி நடக்கவில்லை: ஆய்வுக்கு சென்ற பாஜ குழுவிடம் தவெக நிர்வாகிகளின் ஏற்பாடுகள் சரியில்லை என புட்டு புட்டு வைத்த நபர்
கரூர்: ஆய்வுக்கு சென்ற பாஜ குழுவிடம் விஜய் பிரசாரத்தில் சதி நடக்கவில்லை என்று அண்ணாமலை வாயிலேயே உண்மையை சாட்சிகாரர் சொல்ல வைத்தார். மேலும், தவெக நிர்வாகிகளின் ஏற்பாடுகள் சரியில்லை என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், உண்மை தான்டா ஜெயிக்கும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த எம்பிக்கள் குழுவினர் நேற்றே கரூர் பகுதிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் உடனிருந்தனர். அப்போது, பாஜ குழுவினர் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்ட கேள்விகளையும், பொதுமக்கள் தமிழில் தெரிவித்த கருத்துக்களையும், முன்னாள் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, எம்பி குழுவினருக்கு மொழி பெயர்த்தார். ‘ஒன்மோர் ஐ விட்னஸ்’ என அண்ணாமலை ஒருவரை அழைத்தார்.
அவரிடம் எம்பி குழுவினர் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: விஜய் கூட்டம் நடந்த இடத்திற்கு சரியாக இரவு 7.10 மணிக்கு வந்தார். பின்னர் பொதுமக்களை பார்த்து வணக்கம் தெரிவித்துவிட்டு, 7.13 மணிக்கு பேசத்துவங்கினார். அவர் பேசியது வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே. பேசத்துவங்கிய இரண்டு நிமிடங்களிலேயே ஜெனரேட்டர் ஒயர் பிய்த்துக்கொண்டது. கரண்ட் கட் செய்யப்படவில்லை. இ.பி. கரண்ட் ‘கட்’ ஆன சில நொடிகளில் திரும்ப வந்துவிட்டது. விஜய் வண்டியில் இருந்த ஸ்பீக்கர் தவிர ஜெனரேட்டர் இணைப்பில் இருந்த மற்ற ஸ்பீக்கர்கள் இயங்கவில்லை என்று தெரிவித்தார்.
அப்போது, எம்பி குழுவினர் கேட்கிறார்கள்.., இதில் யாராவது சதி செய்துள்ளதற்கு வாய்ப்புள்ளதா? என அண்ணாமலை கேட்கிறார். அதற்கு அந்த நபர், ‘உறுதியாக சதி எதுவும் எதுவும் இல்லை’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘ஆதவ் அர்ஜூன் பிரசார வேன் மீது ஏறி, பொதுமக்களில் சிலர் மயங்கும் நிலையில் உள்ளனர். உடன் தண்ணீர் பாட்டில் கூட்டத்திற்கு கொடுக்க வேண்டும் என்றவுடன், விஜய் தண்ணீர் பாட்டில்களை எடுத்து கொடுத்தார் என்றார்.
எம்பி குழுவினர், மாவட்ட நிர்வாகம் சரியாக செயல்படவில்லையா என்று கேட்டனர். அதற்கு அவர், விஜய் கட்சி மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்படவில்லை. இதையடுத்து விஜய் எதுவும் பேசவில்லை.
ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடக்கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். 7.10க்கு அவர் வந்தபோது, என்செல்போனில் நான் ‘டைம்’ பார்த்தேன். 10 நிமிடம் இங்கு இருந்த பின்னர், அவர் புறப்பட்டு சென்று விட்டார் என்று தெரிவித்தார். அண்ணாமலை சாட்சியம் அளிக்க அழைத்த நபர் ஒருவர், உண்மையை மட்டும் பளிச்சென்று பேசினார். மொத்தத்தில் அண்ணாமலை நினைத்தது ஒன்றாகவும், நடந்தது ஒன்றாகவும் போனது. அவரே தன் திருவாய் மலர்ந்து, இதில் எந்த சதியும் நடைபெறவில்லை என்பதை கூறவேண்டிய நிலையானது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பகிர்ந்து எப்பவும் உண்மை தான்டா ஜெயிக்கும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.