பா.ஜ நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தார் அண்ணாமலை,நயினார் நாகேந்திரன் மோதல் முற்றுகிறது: வார் ரூம் நிர்வாகியை கட்சியை விட்டு தூக்கி எறிந்தார்
சென்னை: கடந்த சில மாதங்களாக அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே மோதல் முற்றத் தொடங்கியுள்ளது. இதனால், பாஜ நிர்வாகிகள் கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி அடைந்தது.
இதனால் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் தோல்வியை சந்தித்தன. இதனால் அண்ணாமலை மீது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கடும் கோபத்தில் இருந்தனர். இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அண்ணாமலை மீது கோபத்தில் இருந்தார். இதனால், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அப்போது முதல் நயினார் பதவியை காலி செய்ய அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால் நயினார் நடத்தும் பல கூட்டங்களுக்கு அண்ணாமலை செல்வதில்லை. மேலும் அண்ணாமலை ஏற்படுத்தியுள்ள வார் ரூமில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. இது குறித்து நயினார் நாகேந்திரன், பாஜ நிர்வாகிகளை பல முறை எச்சரித்து வந்தார்.
இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரனால், கட்சி பலவீனமடைந்து விட்டதாக அண்ணாமலையின் வார் ரூமில் பணியாற்றும் திருவேற்காட்டைச் சேர்ந்த ஜானி ராஜா சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதோடு எடப்பாடி சொம்பு, நயினார் பாஜ தலைவராக பதவி ஏற்றதில் இருந்து கட்சி பலவீனம் அடைந்து விட்டது. மேலும், கடந்த மூன்று வருடமாக கடுமையான உழைப்பை போட்டு அதிரடி அரசியல் செய்து கட்சியை வளர்த்த தலைவர் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எதிர்பாராமல் மாற்றியதால் அதிருப்தி அடைந்த ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் கோபத்தில் கட்சியையும், புது தலைமையையும் விமர்சனம் செய்தார்கள்.
இதை புரிந்து கொண்டு நிலைமையை பொறுமையாக கையாளாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்கு தங்களின் பங்களிப்பை கொடுக்கும் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை மென் என்ற ஒரு குழுவை வைத்து கண்காணித்து அவர்கள் மீத வழக்கு போடப்படும் என சிறுபிள்ளைத்தனமாக அச்சுறுத்தல் விட்டார் நயினார் நாகேந்திரன் என்று நேரடியாக விமர்சனம் செய்திருந்தார்.
இது எல்லாம் அண்ணாமலையின் தூண்டுதலோடு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் வார் ரூம் நிர்வாகி ஜானி ராஜாவை கட்சியில் இருந்து நயினார் நாகேந்திரன் நீக்கவிட்டார்.
இதனால் அண்ணாமலை கடும் கோபமடைந்தார். இரு நாட்களுக்கு முன்னர் கும்பகோணத்தில் நடந்த பாஜ மாநி நிர்வாகிகள் கூட்டத்தை அவர் புறக்கணித்தார். இது மேலிட தலைவர்களை கடும் அதிர்ச்சி அடையச் செய்தது. சென்னையில் இருந்த அண்ணாமலை, மழை காரணமாக விமானம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. இவ்வாறு அண்ணாமலைக்கும் நயினாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, இது கட்சியில் பரபரப்பாக பேசும் பொருளாக மாறியுள்ளது.

