சென்னை: அண்ணா, எம்ஜிஆர் பற்றி கொச்சையாக பேசிய சீமானுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் சீமான் அண்ணாமற்றும் எம்ஜிஆரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: சமதர்ம திராவிட அரசியலை தமிழ்நாட்டின் நிர்வாக அரசியலாக கட்டமைத்த அண்ணாவையும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பிற்குரிய தலைவராக விளங்கிய எம்ஜிஆரையும், இழிசொல் உரைத்த சீமானுக்கு கடும் கண்டனம். மறைந்த தலைவர்களின் புகழை இழிவுபடுத்தும் நோக்கில் வன்மத்தோடு பேசுவது துளியும் அரசியல் நாகரிகமற்ற செயல். தமிழர்களுக்கே உரித்தான அறத்தை சீமான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை செதுக்கிய ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘சீமான் ஏன் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை. சிலருக்கு நாக்குல சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி என சனிகளில் எத்தனையோ விதமான சனி இருக்கு. அப்படி எல்லா சனியும் ஒன்று சேர்ந்த உருவம்தான் சீமான்’’ என்றார்.
ஓபிஎஸ்: ‘‘அண்ணாவையும், எம்ஜிஆரையும் சீமான் கொச்சைப்படுத்தி பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. இருபெரும் தலைவர்களை இழித்து பேசியதற்கு சீமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.