அண்ணா, எம்.ஜி.ஆர் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு: விஜய் பிரசாரம் என்ற பெயரில் உப்புமாதான் கிண்டுகிறார்
சென்னை: சென்னை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் 13 கோடி மக்கள்தொகை கொண்ட இனம் தமிழ் இனம், சோழன் பல்வேறு நாடுகளை படை எடுத்து வெற்றி கண்டாலும் புலி கொடியை ஏற்றினார்.
ஆனால் இனக்கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழ் இனத்துக்கு நாடு இல்லாமல் போனது. தாயகத்தின் விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த திலீபனின் வழியில் எங்களது இலக்கை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டிக் கொண்டு இருக்கிறார். அதிமுகவிடம் இருந்து 2 இட்லி, திமுகவிடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமை தோறும் விஜய் சென்று வருகிறார். மண்ணரிப்பா? மீன் அரிப்பா? என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. அவரால் எழுதிக் கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க முடியவில்லை.
செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்களே செய்தார்களா என்று கேட்டால் மட்டும் போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?.பிப்ரவரி மாதம் வரையில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார், அது அவரது விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்காவிட்டாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.