அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அன்மோல் பிஷ்னோயை டெல்லியில் என்ஐஏ கைது: 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட டெல்லி வந்த அன்மோல் பிஷ்னோயை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கி சூடு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த அன்மோல் பிஷ்னோய் கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் குஜராத் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடி, கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்வதற்கு உதவியாக இருந்தவன் அன்மோல் பிஷ்னோய். கடந்த 2022ல் தலைமறைவான அன்மோல் அமெரிக்கா சென்ற நிலையில், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று டெல்லி வந்தடைந்தார். அவனை டெல்லியில் வைத்து என்ஐஏ கைது செய்தது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்மோலை 11 நாள் என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.


