6 எஸ்.எஸ்.ஐ.க்கள், ஒரு போலீஸ் உள்பட அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்: எஸ்.பி. அதிரடி உத்தரவு
நாகர்கோவில்: அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் 7 பேரை ஒரே நாளில் கூண்டோடு இடம் மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். 6 எஸ்.எஸ்.ஐ.க்கள், ஒரு ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி துணை போலீஸ் சரகத்துக்குட்பட்ட அஞ்சுகிராமம் காவல் நிலையம், நெல்லை - குமரி எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அஞ்சுகிராமம், மயிலாடி, அழகப்பபுரம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகள் இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்டு வருகின்றன. அஞ்சுகிராமம், குமாரபுரம் சோதனை சாவடியும் இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்டு உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் ஏற்றி வரும் டாரஸ் லாரிகள், இந்த சோதனை சாவடிகளை கடந்து தான் வர வேண்டும். கனிமங்கள் கொண்டு வரும் டாரஸ் லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதிக்கிறார்கள்.
முறைகேடாக கனிமங்கள் ெகாண்டு வரும் வாகனங்கள், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் போலீசார் அதிக கெடுபிடி மற்றும் வசூல் வேட்டை காரணமாக, தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள டெம்போ டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். அப்போது எஸ்.பி.ஸ்டாலினை சந்தித்து பேசிய டெம்போ உரிமையாளர்கள் சங்கத்தினர், அஞ்சுகிராமம் காவல் நிலைய பகுதியில் போலீசார் சிலர் நடத்தும் வசூல் வேட்டைகள் குறித்தும் புகார் கூறி இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். அதன்படி இது தொடர்பாக விசாரணை நடத்த கன்னியாகுமரி டி.எஸ்.பி.க்கு, உத்தரவிட்டார். மேலும் சமீபத்தில் கோயில் ஆர்ச் பிரச்சினையும் அஞ்சுகிராமம் காவல் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது கோஷ்டி மோதலாக மாறும் நிலை உருவானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது திடீரென அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் 7 பேர் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 6 பேர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஆவர். ஒருவர் போலீஸ்காரர் ஆவார். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் சுசீந்திரம், ஈத்தாமொழி, மணவாளக்குறிச்சி, தென்தாமரைக்குளம், வெள்ளிச்சந்தை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். ஒரே காவல் நிலையத்தில் இருந்து 7 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.