மும்பை: அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. அவர் ரூ.17,000 கோடி வரை பணமோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர்.
அனில் அம்பானி கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அதேவேளை, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்குமுன் கைது செய்தனர். இந்நிலையில் அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
தொழிலதிபர் அனில் அம்பானியின் பாந்த்ரா இல்லம், மற்ற சில வீடுகள், வீட்டு மனை, டெல்லி, நொய்டா, மும்பை, கோவா, புனே, ஐதராபாத், சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அலுவலகங்கள் முடக்கப்பட்டுள்ளது.
