*சிறுத்தையா? வனத்துறையினர் விசாரணை
அணைக்கட்டு : வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் ஊராட்சியில் மான்யகொல்லை, அருணகிரியூர், ஏரிக்கொல்லை ஆகிய கிராமங்கள் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் காட்டுப்பன்றிகள், குரங்குகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் அங்கு முகாமிட்டு கூண்டுகள் வைத்து 15க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் மான்யகொல்லை கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கு கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மர்ம விலங்கை விரட்டியடித்தனர்.
ஆனால், கன்றுக்குட்டியை தாக்கியது சிறுத்தை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர், அங்கிருந்து தப்பிய மர்ம விலங்கு மற்றொரு கன்றுக்குட்டியை கடித்து குதறிவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. கன்றுக்குட்டி பலியானதால் அச்சம் அடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடத்தை பார்வையிட்டனர். மேலும், பலியான கன்றுக்குட்டியை பார்வையிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம விலங்கின் கால் தடம் பதிந்திருந்த இடத்தில் தடயங்களை சேகரித்து அது சிறுத்தையா அல்லது நரியா? என கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் அச்சப்படும் நிலையில், யாரும் கால்நடைகளை வனப்பகுதிக்குள் ஓட்டிச்செல்ல வேண்டாம், இரவு நேரத்தில் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.