வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை நியமிக்கலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
சென்னை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை நியமிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். வாக்குச்சாவடி நிலை அலுவலர் (Polling Station Officer) என்பவர், உள்ளூர் வாக்களர்களுக்கு நன்கு பழக்கமான அரசு சார்ந்த அலுவலர் ஆவார்.
பொதுவாக அதே வாக்குபதிவு பகுதியில் உள்ள ஒரு வாக்களாராகவும் இருப்பார். இவர், உள்ளூர் அளவில் அவர் அறிந்தவற்றை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு உதவுகிறார். 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் அரசு, அரசு சார்ந்த உள்ளாட்சி மன்ற அலுவலர்களிலிருந்து வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு சார்ந்த நபர்களாக ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர், கிராம அளவிலான பணியாளர்கள், மின்கட்டண பட்டி தயாரிப்பவர்கள், அஞ்சல் பணியாளர், துணை செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர், சுகாதாரப் பணியாளர், மதிய உணவு பணியாளர்கள், ஒப்பந்த முறை ஆசிரியர்கள், மாநகராட்சி வரித்தண்டல்ர் ஆகியோரை நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இனி ஆசிரியர்கள் மட்டும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அல்ல. நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகளின் நிரந்தரப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு வர முடியாத சூழலில், மேற்கண்டவர்களை நியமிக்க அனுமதி அளித்துள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.