கூடுவாஞ்சேரி: அங்கன்வாடி மைய வாசலில் சூனியம் வைத்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் கீரப்பாக்கம் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு விநாயகபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.
இந்த மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கன்வாடி மைய வாசலில் மர்ம ஆசாமிகள் சூனியம் வைத்து சென்றதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், ‘’அங்கன்வாடி மைய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் புகுந்து வாசலில் இலுப்பை, எலுமிச்சம் பழம் மீது மஞ்சள் குங்குமம், வேப்பிலை ஆகியவற்றை வைத்து சூனியம் செய்துள்ளனர். மறுநாள் காலை அங்கன்வாடி மையத்தை திறக்கவந்தபோது ஆசிரியர் மற்றும் பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் ஊர் முழுவதும் தீபோல் பரவியதால் பீதியடைந்துள்ளோம். எனவே, இந்த விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.