Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்: நெல்லை அருகே அதிர்ச்சி

நெல்லை: நெல்லை அருகே நான்கு பேர் மட்டுமே வசிக்கும் அங்கன்வாடி பணியாளரின் வீட்டுக்கு, மின் கட்டணமாக ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உப கோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சேபா, அங்கன்வாடி பணியாளர். கணவர் இறந்த நிலையில் தனது 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வழக்கம்போல் மின் கட்டண விபரம் வந்துள்ளது. அப்போது சேபா தனது செல்போனில் மின் கட்டணத்தை செலுத்த முயன்ற போது, அதில் காட்டப்பட்ட தொகையைக் கண்டு நிலைகுலைந்து போனார். காரணம், மின் கட்டணமாக ரூ.1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம் பயன்படுத்திய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா என அதிர்ச்சியடைந்த சேபா, உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதையடுத்து மூலக்கரைப்பட்டி பிரிவு அலுவலக அதிகாரிகள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்டு மின் அளவு திருத்தம் செய்து, சரியான மின் அளவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன்படி, மின் நுகர்வோர் இணைப்பிற்கு ரூ.494 என மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் தரப்பில், ``அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதத் தவறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இந்தத் தவறு சரி செய்யப்பட்டு, சரியான கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் மின்வாரியத்தில், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நிகழ்ந்திருக்கலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.