ஆந்திராவில் சூப்பர் ஜிஎஸ்டி- சூப்பர் சேமிப்பு மாநாடு ‘2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்’: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
திருமலை: ஆந்திராவில் நடந்த சூப்பர் ஜிஎஸ்டி- சூப்பர் சேமிப்பு மாநாட்டில், வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆந்திர மாநிலம், கர்னூலில் சூப்பர் ஜிஎஸ்டி- சூப்பர் சேமிப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் முறையில் ரூ.13,429 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். முன்னதாக கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஆந்திரப் பிரதேசம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த பகுதி. மேலும் இளைஞர்கள் மிகவும் துடிப்பானவர்கள். முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் உள்ளனர். ஒன்றிய அரசின் ஆதரவும் உள்ளது. கடந்த 16 மாதங்களில், இரட்டை இஞ்சின் அரசாங்கத்தால் ஆந்திரா வேகமாக முன்னேறி வருகிறது.
டெல்லி மற்றும் அமராவதி இரண்டும் விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்கின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும், 2047ம் ஆண்டுக்குள், இந்தியா வளர்ந்த நாடாக மாறும். மின்சாரம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பல திட்டங்களை நாங்கள் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளோம். இத்திட்டங்கள் அனைத்தும் மாநிலத்தில் இணைப்பு மற்றும் தொழில்களை வலுப்படுத்தும். தற்போது, ரூ.3,000 கோடி மதிப்பிலான மின்மாற்றத் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் நாட்டின் எரிசக்தித் திறனை அதிகரிக்கிறது. கடந்த காலத்தில், காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, மின்தடை போன்ற நெருக்கடிகள் இருந்தன. தனிநபர் மின் நுகர்வு 1000 யூனிட்டுகளுக்கும் குறைவாக இருந்தது.
பல கிராமங்களில் மின் கம்பங்கள் கூட இல்லை. நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய சுத்தமான எரிசக்தியிலிருந்து போதுமான மின்சாரம் உற்பத்தி செய்வதில் இப்போது சாதனைகளைப் படைத்து வருகிறோம். நாட்டில் இப்போது தனிநபர் மின் நுகர்வு 1400 யூனிட்டுகள் ஆகும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக ஆந்திர மக்கள் ரூ.8 ஆயிரம் கோடியை சேமித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த சலுகைகள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அது வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். இதில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யான், அமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.