ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி நேற்று தரிசனம் செய்தார். ஆந்திராவில் ரூ .13,430 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று வந்தார். கர்னூல் நகருக்கு விமானம் மூலம் வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் சந்திரபாபு நாயுடு, கவர்னர் அப்துல் நசீர் ஆகியோர் வரவேற்றனர்.
இதன் பின்னர் புகழ்பெற்ற ஸ்ரீசைலம், மல்லிகார்ஜூன சுவாமி கோயிலுக்கு மோடி சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் சென்றனர். கோயிலில் வழிபட்ட பின்னர் அங்கு உள்ள சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அதில் சத்ரபதி சிவாஜியின் கோட்டைகளான பிரதாப்காட், ராஜ்காட், ராய்காட் மற்றும் ஷிவ்னெரி கோட்டைகள் மாதிரியில் கட்டப்பட்டுள்ள தியான அரங்குகளை மோடி பார்வையிட்டார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி 1677 ஆம் ஆண்டு ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.அதனை நினைவுகூரும் வகையில், கோயிலுக்கு அருகில் ஒரு நினைவிடமும், ஒரு நினைவுத் தூணும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.