ஆந்திராவில் புதிய திட்டம் அறிமுகம் 2.90 லட்சம் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி: ரூ.436 கோடி அரசு செலுத்தியது
திருமலை: 2.90 லட்சம் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ, கேப் மற்றும் மேக்ஸி கேப் டிரைவர்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று விஜயவாடாவின் சிங் நகரில் உள்ள மகினேனி பசவபுன்னய்யா ஸ்டேடியத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்டவல்லி அருகே ஆட்டோவில் பயணித்தார். அதன் பிறகு பசவபுன்னய்யா ஸ்டேடியத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆட்டோ, டாக்சி, டிரைவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 234 தகுதியுள்ள ஆட்டோ, டாக்சி, கேப் டிரைவர்களுக்கு ரூ.436 கோடி அரசு செலுத்தியது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.