ஆந்திராவில் கொலை செய்து சென்னை கூவத்தில் சடலம் வீச்சு பவன் கல்யாண் கட்சி தலைவர் உள்பட 5 பேர் கைது: ஆபாச வீடியோ, தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏவுக்கு உளவு சொன்னதால் ஆத்திரத்தில் வெறிச்செயல்
சென்னை: ரேணிகுண்டாவில் கொலை செய்து, வாலிபர் உடலை சென்னை கூவத்தில் வீசிய ஜனசேனா கட்சியின் மண்டல தலைவர் கைது செய்யப்பட்டார். ஆபாச வீடியோ மற்றும் தெலுங்கு தேச எம்எல்ஏவுக்கு உளவு சொன்னதால் வாலிபரை கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த ஜூலை 8ம் தேதியன்று, கூவத்தில் ஒரு வாலிபரின் உடல் கிடப்பதாக வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த வேலா (வயது 40) என்பவர், ஏழுகிணறு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கூவம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த வாலிபரின் பிரேதத்தை கரைக்கு கொண்டு வந்து பரிசோதித்தனர். சுமார் 27 வயது மதிக்கத்தக்க வெளிமாநில நபராக இருந்தார். அவர் டீ-சர்ட், டவுசர் அணிந்திருந்தார், காதில் வளையம் இருந்தது, கழுத்தில் கயிறால் இறுக்கப்பட்டதற்கான அடையாளமும், வலது கழுத்து முதல் தோள்பட்டை வரை காயமும் காணப்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டு, சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பூக்கடை உதவி ஆணையர் தலைமையில், ஏழுகிணறு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான காவல் குழு, நவீன தொழில்நுட்ப உதவியுடன் சம்பவ இடத்திற்கு வந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறிந்து விசாரணையைத் தொடங்கினர். ஜூலை 10ம் தேதியன்று ஸ்டான்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், இளைஞர் கொலை செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
விசாரணையில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்த சிலர் இந்த சடலத்தை ஏழுகிணறு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. தனிப்படை போலீசார், வாகன பதிவு எண்ணை வைத்து உரிமையாளரைக் கண்டறிந்து, ரேணிகுண்டா மற்றும் திருத்தணி பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். தீவிர விசாரணைக்குப் பிறகு, ஜூலை 11ம் தேதின்று, ஆந்திர மாநிலத்தின் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவை சேர்ந்த சந்திரபாபு (35),
மனைவி வினுதா கோட்டா (31) - ஜனசேனா கட்சி ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி மண்டல் தலைவர், ஊழியர்கள் சிவகுமார் (36) - ஜனசேனா கட்சி ஐடி பிரிவு, கோபி (24), , ஓட்டுநர் ஷேக் தாசர் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சாட்சிகள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களால் பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா டியூவி -300 கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இறந்தவர் ஆந்திர மாநிலம் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, பக்சிம்பாலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (எ) ராயுடு (22) என்பது தெரியவந்தது. அவர் 2019 முதல் சந்திரபாபு மற்றும் வினுதா கோட்டாவின் வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம், வினுதா கோட்டா தனது படுக்கையறையில் உடை மாற்றும்போது, ஸ்ரீனிவாசலுவின் செல்போன் கட்டிலுக்கு அடியில் இருந்தது கண்டறியப்பட்டது. அதில் கேமரா இயக்கத்தில் இருந்ததால், சந்தேகம் எழுந்தது.
விசாரணையில், ஸ்ரீனிவாசலு ஜனசேனா கட்சியின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ பஜாலா சுதீர் ரெட்டிக்கு, சந்திரபாபு மற்றும் வினுதா கோட்டாவின் ரகசியங்களை பணத்திற்காக விற்றதாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரில் வினுதாவின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாகவும் தெரியவந்தது. இதனால், ஜூன் 21 அன்று ஸ்ரீனிவாசலு எச்சரிக்கப்பட்டு, அவரது பாட்டி ராஜேஸ்வரியுடன் அனுப்பப்பட்டார்.
ஆனால், சமீபத்தில் சந்திரபாபு மற்றும் வினுதா மீண்டும் ஸ்ரீனிவாசலுவை வரவழைத்து, 4 நாட்கள் சட்டவிரோதமாக வீட்டில் கட்டி வைத்து, அடித்து, கட்சி ரகசியங்களை வெளியிட்டது குறித்து விசாரித்தனர். ஜூலை 7ம் தேதி காலை 8:30 மணியளவில், ஸ்ரீனிவாசலு கழிவறைக்குச் சென்று திரும்பவில்லை. கதவை தட்டியபோது, பயத்தில் தாழிட்டு உட்கார்ந்திருந்தார். உடனே, சந்திரபாபு மற்றும் ஷேக் தாசர் டிரில்லிங் மெஷின் மூலம் கதவை உடைத்து, இரும்பு சங்கிலியால் ஸ்ரீனிவாசலுவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சியினர் பிரச்சனை செய்யலாம் என நினைத்து, அதே நாள் மாலை, காரில் சடலத்தை பின் இருக்கையில் வைத்து, சந்திரபாபுவின் மாமனார் பாஸ்கர் ரெட்டிக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி புறப்பட்டனர். தமிழ்நாடு எல்லையில் கார் பழுதானதால், மற்றொரு காருக்கு சடலத்தை மாற்றி, சிவகுமார், ஷேக் தாசர், மற்றும் கோபி ஆகியோர் ஏழுகிணறு பகுதிக்கு வந்துள்ளனர்.
பேசின் பாலம் கூவத்தில் தண்ணீர் அதிகமாக சென்றதால், உடலை கூவத்தில் போட்டால் அப்படியே தண்ணீரில் அடித்துச் சென்று கடலில் போய் கலந்து விடும் என்று நினைத்து உடலை வீசியுள்ளனர். ஆனால் உடல் கரை ஒதுங்கியதால் மாட்டிக் கொண்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.