விஜயவாடா: ஆந்திராவின் கோனசீமா மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா? என தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; "கோனசீமா மாவட்டம், ராயவரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர விபத்தில் பல உயிர்கள் இழப்பு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணங்கள், தற்போதைய நிலைமை, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவி குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளில் பங்கேற்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.