Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு

டெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கிறது. ரூ.1.3 லட்சம் கோடியில் மிகப்பெரிய ஏஐ மையம் அமைக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 2026 முதல் 2030 வரை 5 ஆண்டுகளில் இத்திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய ஏஐ மையம் ஆந்திராவில் அமைகிறது. ஆசியாவில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவில் அமைவது முக்கியத்துவம் பெறுகிறது

ஏற்கெனவே பிபிசிஎல் நிறுவனம் ரூ.91,000 கோடியை ஆந்திராவில் முதலீடு செய்துள்ளது. ஆந்திராவில் அதானி குழுமம் ரூ.18,900 கோடியும், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் ரூ.5,001 கோடியும் முதலீடு செய்துள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆந்திராவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் தனியார் நிறுவனம் முதலீடு செய்த மிகப்பெரிய தொகை இதுதான். இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கு கூகுள் ஏஐ மையம் உதவும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி; ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏ.ஐ. மையம் அமைக்கப்படுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆந்திராவில் ஏ.ஐ. மையம் அமைவதால் அனைவருக்கும் ஏ.ஐ. என்பது உறுதியாகும். கூகுளின் ஏ.ஐ. மையம் அமைவதன் மூலம் தொழில் நுட்பத்தில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று கூறினார்.

இது தொடர்பாக சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், "கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை அமைக்கவுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேசினேன். ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.. இதன் மூலம் இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்டு செல்லப்படும். இது ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.