திருமலை: ஆந்திராவில் உள்ள 26 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 32 மாவட்டங்களாக பிரிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண் தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய மாவட்டங்கள் வரும் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர பிரதேசம் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது 23 மாவட்டங்கள் இருந்தது. இவற்றில் 10 மாவட்டங்கள் தெலங்கானாவிலும், 4 மாவட்டங்கள் ராயலசீமாவிலும், 9 மாவட்டங்கள் ஆந்திர பகுதியிலும் இருந்தது.
இந்த மாவட்டங்களில் 294 சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. இந்நிலையில் 2014ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அதில் இருந்த 10 மாவட்டங்களை, அப்போதைய முதல்வர் சந்திரசேகரராவ் நிர்வாக வசதிக்காக 36 மாவட்டங்களாக பிரித்தார். இதற்கிடையில், புதிய தலைநகரம் இன்றி இருந்த ஆந்திராவை மேம்படுத்த அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு மும்முரமாக இருந்த நிலையில், 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன்ரெட்டி, ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரித்தார்.
ஆனால், முந்தைய அரசு இதனை அறிவியல் பூர்வமாகச்செய்யவில்லை எனக்கூறி முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணைமுதல்வர் பவன்கல்யாண் தலைமையிலான கூட்டணி அரசு குற்றம் சாட்டியது. இதனால் 26 மாவட்டங்களை மறுசீரமைத்து 32 புதிய மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில் முன்மொழிவு செய்து, ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தது 4 முதல் 5 சட்டசபை தொகுதிகளாக சீரமைப்பு செய்யப்படுகிறது.
அதன்படி பலாசா மாவட்டம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மன்யம் பார்வதிபுரம் மாவட்டம், விஜயநகரம் மாவட்டம், விசாகப்பட்டினம் மாவட்டம், அல்லூரி சீத்தாராமராஜு, அனகாபள்ளி மாவட்டம், காக்கிநாடா மாவட்டம், கிழக்கு கோதாவரி, பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூர் மாவட்டம், கிருஷ்ணா மாவட்டம், என்டிஆர் மாவட்டம், அமராவதி மாவட்டம், குண்டூர் மாவட்டம், பாபட்லா மாவட்டம், பல்நாடு மாவட்டம், மார்க்கபுரம் மாவட்டம், ஓங்கோல் மாவட்டம், ஸ்ரீபொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம், கூடூர் மாவட்டம், ஸ்ரீபாலாஜி திருப்பதி மாவட்டம், சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி மாவட்டம், சத்யசாய் மாவட்டம், அனந்தபூர் மாவட்டம், அதோனி மாவட்டம், கர்னூல் மாவட்டம், நந்தியால் மாவட்டம், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம், அன்னமய்யா மாவட்டம் என 32 மாவட்டங்களாக உருவாக்கப்படுகிறது. இந்த புதிய மாவட்டங்கள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
