திருமலை: ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், சோடவரத்தில் கிளை சிறை இயங்கி வருகிறது. இச்சிறையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பேஜ்ஜவாடா பகுதியை சேர்ந்த ராமு மற்றும் பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றிய போது பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணத்தை மோசடி செய்த குண்டூர் பகுதியை சேர்ந்த நக்கா ரவிக்குமார் ஆகியோர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை விசாரணை கைதிகளான ராமு, ரவிக்குமார் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் அங்கு பணியில் இருந்த வார்டன் தலையில் பலமாக தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த வார்டன் ரத்த சொட்டியபடி கீழே சரிந்தார். அப்போது வார்டன் வைத்திருந்த சாவியை ராமு, ரவிக்குமார் ஆகிய இருவரும் பறித்துக்கொண்டு கதவை திறந்து சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். வார்டனின் சத்தம் கேட்டு ஓடி வந்த சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.