பவானி: ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). இவரது மனைவி கீர்த்தனா (25). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், வந்தனா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்கு துடைப்பம் வியாபாரத்துக்கு வந்தனர். அதன்படி அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர், கோணவாய்க்கால் பிரிவில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்திற்கு கீழே தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர். நேற்று முன்தினம் இரவு ஆந்திர தம்பதி குழந்தைகளுடன் தூங்கினர். அதிகாலையில் வெங்கடேஷ் எழுந்து பார்த்தபோது கொசு வலைக்குள் தூங்கிய குழந்தை வந்தனாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், சித்தோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கொசுவலையை கிழித்து குழந்தையை கடத்திச்செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து மர்ம நபரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
+
Advertisement