Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆந்திர பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதல் தண்டனை தர வேண்டும்: ராமதாஸ்

சென்னை: ஆந்திர பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களுக்கு 2 மடங்கு கூடுதல் தண்டனை தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கடந்த 30-ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து அதிலிருந்த 52 வயது தாயையும், 22 வயது மகளையும் தனியே அழைத்துச் சென்று தாயை அருகில் நிற்க வைத்து விட்டு, மகளை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். அந்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தாயின் கண்ணெதிரிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாப்பு தரவேண்டிய காவலர்களே "வேலியே பயிரை மேய்ந்த கதை"யாக இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றி இருப்பது அவமானகரமான செயலாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது "ஒரு பெண் பொன் ஆபரணங்கள் அணிந்து கொண்டு நட்ட நடு ராத்திரியில் தனியாக செல்கின்ற சூழல் எப்பொழுது நிலவுகிறதோ அன்று தான் முழு சுதந்திரம்" என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தாயுடன் வந்த இளம் பெண்ணுக்கு இத்தகைய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அதுவும் பாதுகாப்புத் தர வேண்டிய காவலர்களாலேயே இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது என்றால் நாட்டின் சுதந்திரம், பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என கேள்விகள் எழுகிறது.

சமூக விரோதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் தங்கள் பதவியின் பொறுப்பை உணராமல், அதிகார போதையில் அப்பாவிப் பெண்களை மிரட்டி இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பது கண்டிக்கவும், தண்டிக்கவும் தக்கது.

ஒரு குற்றத்தை செய்தால் அந்த குற்றத்திற்கான தண்டனை என்ன என்று தெரிந்திருந்தும் இதுபோன்ற கொடூரமான செயலை செய்திருக்கின்ற இரு காவலர்களுக்கும் மற்ற குற்றவாளிகளுக்கு தருகின்ற தண்டனையை விட இரண்டு மடங்கு கூடுதல் தண்டனை தர வேண்டும். தயவு தாட்சண்யம் இன்றி துறை ரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் .

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு அதிகபட்ச நிவாரண நிதி வழங்குவதுடன், காவல்துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களிடம் மனிதநேயத்தோடு எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்த கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.