ஆந்திராவில் பழங்குடியினரை சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எனக்கூறி வங்கியில் ரூ.10 கோடி மோசடி: 4 பேர் மீது வழக்கு; சினிமா பாணியில் துணிகரம்
திருமலை: ஆந்திராவில் பழங்குடியினரை, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எனக்கூறி வங்கியில் ரூ.10 கோடி கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடித்த ‘குபேரா’ திரைப்படம் பிச்சைக்காரர்களை தொழிலதிபர்களாக மாற்றி வங்கியில் பணம் பரிமாற்றம் மற்றும் ஹவாலா பணத்தை மாற்றுவது போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த சினிமா பாணியில் ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் வங்கி உள்ளது. இங்கு பழங்குடியினர் மூலம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என்று கூறி ₹10 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லூர் மற்றும் முதுகூரில் கிளைகளை கொண்ட தனியார் வங்கி மூலம் பணம் மோசடி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜாலி வாசுதேவநாயுடு, அல்லாபகஷ், சிவா, வெங்கட் உள்பட பலர் பல ஊர்களுக்கு சென்று படிப்பறிவில்லாதவர்கள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் சிலரை சந்தித்து, வங்கிக்கடன்கள் வழங்குவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து ஆதார் அட்டைகள் மற்றும் புகைப்படங்களை வாங்கி வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளனர். பின்னர் போலியாக சாப்ட்வேர் நிறுவனங்கள் பெயர்கள் உருவாக்கி, அந்த நிறுவனங்களில் மென்பொருள் ஊழியர்களாக பணியாற்றுவதாக பழங்குடியின தொழிலாளர்கள், கால்நடைகளை மேய்ப்பவர்களை காண்பித்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதாக ஆவணங்கள் தயாரித்து, அனைவருக்கும் 6 மாத சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் தனியார் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒவ்வொருவரின் பெயரிலும் வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் கடன் பெறப்பட்டது. இந்த முழு விவகாரத்திலும், வங்கி ஊழியர்கள் நேரடியாக பேசாமலோ, சந்திக்காமலோ, பயனாளிகள் எவரையும் ஆய்வு செய்யாமலோ கடன்களை வழங்கியுள்ளனர்.
4 மாதங்களாக வங்கி தவணைகளை செலுத்தி வந்த போலி ஆசாமிகள் அதன்பிறகு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் கடன் தொகையை செலுத்துமாறு ஆதார் கார்டில் உள்ளவர்களுக்கு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து வங்கியில் கடன் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்னர். அதன்பிறகு வங்கி சார்பில் போலீசில் புகார் கொடுத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிநாயக் நேற்று கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களாக 56 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வங்கி மேலாளரின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 4பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.