Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் உள்ள பழங்குடியினர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கால்களை பிடித்து விடும் மாணவிகள்: சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

திருமலை: அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கால்களை மாணவிகள் பிடித்து விடும் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பந்தப்பள்ளியில் பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் சுஜாதா. இவர், மாணவிகளிடம் தனக்கு தேவையான வேலைகளை செய்யுமாறு தினமும் கூறுகிறாராம்.

அதன்படி பள்ளி நேரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மாணவிகளை தனது கால்களை பிடித்துவிடும்படி கூறியுள்ளார். அவர்களும் அப்படியே செய்துள்ளனர். அந்த நேரத்தில் தலைமை ஆசிரியை செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளார். இவற்றை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இக்காட்சிகளை பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி, ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய தலைமை ஆசிரியையே இவ்வாறு செய்வது சரியா? அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்னர்.

இதுகுறித்து உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினர். அதில் இந்த காட்சிகள் உண்மை என தெரியவந்தது. அதன்பேரில் சீத்தாம்பேட்டை பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் ஜெகநாத், ஆசிரியை சுஜாதாவை பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.