ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மருதிமில்லி என்ற இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேடப்பட்டு வந்த நக்சல் முன்னணி தளபதி மத்வி ஹித்மாவின் தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வேறு எந்த நக்சல்களும் அந்தப் பகுதியில் மறைந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து அப்பகுதியில் சோதனைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


