ஆந்திராவில் நள்ளிரவு விபத்து புதிதாக வாங்கிய கார் பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி 3 பேர் பரிதாப பலி
*தோழியுடன் வந்த வாலிபர் படுகாயம்
திருமலை : ஆந்திராவில் கார் வாங்கிய மறுநாள் நள்ளிரவு அதை ஓட்டியவர் அடுத்தடுத்து பைக்குகள் மீது மோதியுள்ளார். இதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். காரை ஓட்டிவந்தவர் மற்றும் அவரது தோழி காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் உள்ள ஆர்டிசி பஸ் நிலையம் வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய கார் ஒன்று வேகமாக சென்றது. முன்னால் சென்ற வாகனங்களை ஓவர்டேக் செய்தபடி சென்ற அந்த கார், யாரும் எதிர்பாராத வகையில் அவ்வழியாக வந்த 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. பின்னர் சாலையின் தடுப்புச்சுவற்றின் மீது மோதிவிட்டு பல்டி அடித்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற பேராஜூப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்(32), காக்கிநாடா அவசரல் வீதியை சேர்ந்த லட்சுமணன்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களுக்கு பின்னால் மற்றொரு பைக்கில் வந்த துர்காபிரசாத் (32) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் காரை ஓட்டி வந்த ராமகிருஷ்ண ரவுப்பேட்டையை சேர்ந்த சல்லா ராம்மோகன்(29), காரில் வந்த அவரது தோழி வெங்கடா நகரைச் சேர்ந்த பத்மா ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மூன்றாவது நகர போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ராம்மோகனையும், பத்மாவையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதிய கார் வாங்கிய மறுநாளில் தனது தோழியுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.
விபத்துக்குள்ளான காரில் இருந்து மதுபாட்டில்கள் சாலையில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் போலீசார் தெரிவித்தனர். காரை ஓட்டியவர் குடிபோதையில் அதிவேகத்தில் ஓட்டி வந்ததால் விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். சம்பவ இடத்தை காக்கிநாடா டிஎஸ்பி ஹனுமந்த ராவ், மூன்றாம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணபகவான் மற்றும் போலீசார் ஆய்வு செய்து கிரேன் மூலம் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மதுபோதையில் ராம்மோகன், பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினாரா? என அவரை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.