சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு நேற்று காலை 7.20 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இதில் அந்தமான் செல்ல 158 பயணிகள் இருந்தனர். இவர்கள் காலை 6 மணிக்கு முன்பே வந்து விட்டனர். ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் தாமதமாக காலை 11 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வந்திருந்த 158 பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். அதோடு பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மற்ற விமானங்கள் அந்தமானில் வந்து தரை இறங்கி, சென்றுள்ளன.
ஆனால் இந்த விமானத்திற்கு மட்டும் என்ன மோசமான வானிலை என்று கேட்டனர். அதற்கு அதிகாரிகள், இது பெரிய ரக விமானம். எனவே பயணிகள் பாதுகாப்பு நலன் கருதியே, வானிலை சீரடைந்த பின்பு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, பயணிகளை சமாதானப்படுத்தினர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.