Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் ஆண்டாள் கோயில் தேரோட்டம் அமர்க்களம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர தினமான நேற்று காலை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்கள் முழங்க, தேர் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தேரில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.10 மணியளவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பக்தர்கள் ‘கோவிந்தா... கோபாலா...’ என கோஷங்கள் எழுப்பியவாறு தேரை இழுத்துச் சென்றனர். நான்கு ரதவீதிகளையும் வலம் வந்த தேர், பகல் 1 மணியளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டது.கண்காணிப்பு பணிக்காக 2 ட்ரோன்கள், 200 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.