சென்னை: சின்னங்கள், கோயில், கட்டடங்களை பாதுகாக்க புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, கோயிலில் சுற்றுச்சுவருக்கு மிக அருகில், கியூ காம்ப்ளக்ஸும், பக்தர்கள் காத்திருப்பு கூடமும் கட்ட வேண்டிய அவசியம் என்ன என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடையும் விதித்திருந்தது. மேலும், அக்டோபர் 5-ம் தேதி கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து நீதிபதிகள் நேரில் ஆய்வும் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ். சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோயிலில் கட்டப்படவுள்ள கட்டுமானங்கள் கட்டப்பட்டு வரும் கட்டுமானங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கை அறநிலையத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், கோயிலுக்குள் அன்னதான கூடம், பக்தர்கள் காத்திருப்பு கூடம், பிரசாத கடைகள், யானை நினைவு மண்டபம் போன்ற கட்டுமானங்களை கட்டக் கூடாது என உத்தரவிட்டனர்.
சின்ன கடை தெருவில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கும் பணி, ராஜ கோபுரத்திற்கு மின்விளக்குகள் பொருத்தும் பணி, கோயிலுக்கு வெளியில் பக்தர்கள் தங்குமிடம் உள்ளிட்ட சில கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், அம்மன் திருத்தேர் பழுது நீக்கும் பணிக்கும் அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பழமையான, புராதன கோயில்கள் சின்னங்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட புராதன சின்ன ஆணைய சட்டம் கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் புராதன சின்ன ஆணையம் அமைக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த ஆணையத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 23-ம் தேதி தள்ளி வைத்தனர்.
அப்போது, கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ள உள்ள கட்டுமானங்களின் அவசியம் குறித்த அறிக்கையையும், தொழில்நுட்ப அறிக்கையையும், கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பெறப்பட்ட அனுமதிகள் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.