Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாடு குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிந்து விட்ட நிலையில் அந்த பகுதிகளில் தாளடி பருவ நெல்லும், மற்ற பகுதிகளில் சம்பா பருவ நெல்லும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நடவுக்கு முன்பாக அடியுரமும், நடவு நட்ட சில நாள்களில் மேலுரமும் இட வேண்டும். அப்போது தான் நெற்பயிர்கள் ஓரளவு வளர்ந்து வடகிழக்கு பருவமழையை சமாளித்து நிற்க முடியும். ஆனால், உரம் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் உரம் இட முடியாமல் தங்கள் பயிர் என்னவாகுமோ? என்ற கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர். வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு அமைப்புகளின் பணியாளர்களும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் வழங்கப்படாததால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது.

ஒரு மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படும் போது, அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். ஆந்திரம், தெலுங்கானம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட உரத்தட்டுப்பாட்டை அந்த மாநிலங்களின் அரசுகள் மிகச் சிறப்பாக கையாண்டன. உரத்தட்டுப்பாட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு இன்னும் தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொண்டு உரத்தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான உரங்களின் விவரம் ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த உரங்களை பெற்று உழவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், ‘‘மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10 சதவீத ஜிஎஸ்டி சலுகை மீண்டும் வழங்க உடனடியாகயாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.