Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீதிமன்றத்தில் தடை விதிக்கப்படாததால் மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூடியது: அன்புமணி மீண்டும் தலைவராக தீர்மானம்

* சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை

சென்னை: அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாசுக்கு நெருக்கடி தரும் வகை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பாமக கட்சியில், நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கும் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சத்தில் இருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட போதிலும் எந்தவிட சமதானமும் அன்புமணிக்கும் ராமதாஸூக்கும் நிலவவில்லை. இதனால் இருவருக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. பாமகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, சாகும்வரை நான் தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால், அன்புமணி நான் தான் தலைவர் என்று கூறி வருகிறார்.

இருவரும் ஏட்டிக்கு போட்டியாக கட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் பல முக்கிய தலைவர்கள், வன்னியர் அமைப்புகள் மாற்று கட்சிகளை நாடும் நிலை உருவாகி உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே கட்சியை யார் கைப்பற்றுவது என்ற மோதல் உச்சமடைந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, பாமக நிறுவனர் ராமதாசுக்கு போட்டியாக கடந்த மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 3 நாட்கள் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து அன்புமணி ஆலோசனை கூட்டம் நடத்தினார். மேலும், அன்புமணிக்கு போட்டியாக ராமதாசும் தைலாபுரம் தோட்டத்தில் போட்டி கூட்டம் நடத்தினார். இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வரும் 17ம்தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

ராமதாசின் பொதுக்குழு அறிவிப்புக்கு எதிராக, அன்புமணி தரப்பில் போட்டி பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டி பொதுக்குழு அறிவிப்பு பாமக தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த பொதுக்குழுவிற்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது பாமக கட்சியின் நலன் கருதி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். இதற்காக இருவரையும் எனது அறைக்கு வரச் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் உடல் நிலை காரணம் காட்டி அவரால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராமதாஸ் ஆஜராகினார்.

இந்த விசாரணையை தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவையென்றால் ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவிட்டார். இதனால் அன்புமணி தரப்பு குஷியாகியது. வரும் 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ளதால், அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தின் மூலம் தனது பலத்தை காண்பிக்க நல்ல வாய்ப்பு என்று அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. மேலும் அன்புமணி தலைமையில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதற்காக காலை 7மணி முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் தனியார் ரிசார்ட்டுக்கு வரத் தொடங்கினர். முன்னதாக இதில் பங்கேற்க வந்த அன்புமணிக்கு பாமகவினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் போட்டியாக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரிசார்ட்டுக்குள், பொதுக்குழுவில் கலந்து கொள்ள பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 3500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 2480 பேருக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தது. சரியாக, 11 மணிக்கு பொதுக்குழு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 11 மணியை கடந்தும் இருக்கைகள் காலியாக காணப்பட்டது. அதன் பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொன்றாக வந்தனர்.

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பொதுக்குழு நடைபெறும் ரிசார்ட் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், நேரம் ஆக ஆக பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பலர் ஒரே நேரத்தில் குவிந்ததால், பாஸ் வாங்கும் இடத்தில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அரங்கம் முழுமையாக நிரம்பியது. மேடையில் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பாலு, 3 எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக இருந்து, ராமதாசால் நீக்கப்பட்ட அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. குறிப்பாக, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தலைவராகவும், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.