Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அன்புமணியை நீக்கிவிட்டோம் - ராமதாஸ்; நான்தான் கட்சிக்கு தலைவர் - அன்புமணி; மாம்பழத்தை கேட்டு தந்தை, மகன் குஸ்தி தேர்தல் ஆணையத்தில் போட்டி மனு

* 2 ஆக உடைந்தது பாமக

* சின்னம் முடக்கமா?

திண்டிவனம்: அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். நானே தலைவராக செயல்படுவதால் கட்சி சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. இருவரும் நான்தான் தலைவர் என கூறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் வருகின்றனர். சமீபத்தில் ராமதாசால் கட்சியின் இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சேலம் எம்எல்ஏ அருளின் பாமக சட்டமன்ற கொறடாவை பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அன்புமணி ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து, பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இருவரும் தங்களது ஆதரவு நிர்வாகிகள் மூலம் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் ராமதாஸ் திண்டிவனத்தில் பாமக செயற்குழுவையும், அன்புமணி சென்னை பனையூரில் பாமக நிர்வாக குழு கூட்டத்தையும் தனித்தனியாக கூட்டினர். திண்டிவனம் கூட்டத்தில், ராமதாசுக்கு எதிராக செயல்படும் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்குவது, கூட்டணி குறித்து முடிவெடிப்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை நான் தொடங்கிவிட்டேன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள்.

தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் ஆணைய விண்ணப்ப படிவமான ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்கு மட்டும் உள்ளது’ என்று கூறியிருந்தார். இந்த கூட்டத்தின் பேனர்களில் அன்புமணி படம், பெயர் புறக்கணிக்கபப்ட்டிருந்தது. அதே நேரத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என கூறி அன்புமணி மனைவி சவுமியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ராமதாஸ், நேற்றைய கூட்டத்தில் தனது மூத்தமகள் காந்திமதியை மேடையில் அமரவைத்து அழகு பார்த்தார்.

இதேபோல் அன்புமணி தலைமையில் நடந்த பனையூர் கூட்டத்தில், ‘பாமக செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கு மட்டுமே உண்டு. தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி இல்லாமல் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானது’ என தீர்மானம் நிறைவேறின. தந்தை-மகன் மோதல் கட்சி இரண்டாக உடைந்து உள்ளதால், தற்போது தேர்தல் ஆணையம் வரை இந்த விவகாரம் சென்று உள்ளது.

ஏற்கனவே அன்புமணி டெல்லி சென்று, பாஜ மேலிட தலைவர்களை சந்தித்ததோடு இந்திய தேர்தல் ஆணையத்தையும் சந்தித்து பாமகவுக்கு பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான், புதிய தலைவர் பொதுக்குழுவால் தேர்வாகும்வரை தனக்கே அதிகாரம் என குறிப்பிட்டு மாம்பழம் சின்னத்துக்கான உரிமையை கோரி இருப்பதாக தகவல் வெளியானது. அன்புமணியின் இத்தகைய செயல்பாடுகளால் கடும் விரக்தியடைந்த ராமதாஸ் அவரது பெயரையே பாமகவினர் யாரும் உச்சரிக்கக் கூடாது என கண்டிப்புடன் கூறியதோடு கட்சியினருக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். படிப்படியாக அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கு ராமதாஸ் செல்வதாக பாமக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதனிடையே பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய பிறகு ராமதாஸ் சார்பில் இந்திய தேர்தல் கமிஷனிடம் கடந்த 30ம் தேதி ஒரு மனு கொடுத்து உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், ‘இதுவரை பாமகவின் தலைவராக இருந்த அன்புமணியின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்ேடாம். பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் அன்புமணியை செயல் தலைவராக நியமித்து உள்ளேன். இதனால், பாமக தலைவர் பதவியை நானே ஏற்று உள்ளேன்.

புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறேன். இதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இதுவரை தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் மே 28ம் தேதியுடன் நிறைவு பெற்று விட்டது என்பதையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவரது பதவி காலம் முடிந்த மறுநாளே என்ன பாமக நிர்வாகிகள் தலைவராக தேர்வு செய்து விட்டனர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவுடன் 1413 செயற்குழு உறுப்பினர்கள், 21 தலைமை நிர்வாக குழு உறுப்பினர்களின் புகைப்பட்டத்துடன் அவர்கள் கையெழுத்திட்ட ஒப்புதல் கடித்தத்தை ராமதாஸ் வழங்கி உள்ளார்.

ராமதாசின் தனி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் உள்ள சாமிநாதன்தான் டெல்லியில் ராமதாஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பு அன்புமணி ஒன்றிய அமைச்சராக இருந்தபோது அவருக்கு தனி செயலராக இருந்ததால் அவர் மூலமாகவே டெல்லியில் காய் நகர்த்தி உள்ளார் ராமதாஸ். இதனால் இந்திய தேர்தல் ஆணையம் யாருடைய மனுவை ஏற்கும், மாம்பழ சின்னம் யாருக்கு செல்லும் என்ற பரபரப்பு பாமகவில் எழுந்துள்ளது. கட்சியின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் யாரிடம் செல்கிறதோ அதை வைத்துதான் பாமகவின் எதிர்காலம் குறித்து தெரியவரும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என செயல்பட்டு, இருவரும் சின்னத்துக்கு உரிமை கோரியதால் இரட்டை சின்னம் முடக்கப்பட்டது. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் சின்னத்துக்கு உரிமை கோரியதால்மீண்டும் இரட்டை சின்னம் முடக்கப்பட்டது. தற்போது, பாமகவில் தந்தை-மகன் இருவரும் சின்னத்துக்கு உரிமை கோரி உள்ளதால் மாம்பழம் சின்னம் முடக்கப்படுமா அல்லது கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவுபடி ஒருவருக்கு வழங்கப்படுமா என்று பாமக தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

* ராமதாஸ் தலைமையில் கும்பகோணத்தில் இன்று பொதுக்குழு

பாமகவை கைப்பற்றும் நோக்கி அன்புமணி மாவட்ட பொதுக்குழுவை நடத்தி வருகிறார். அதே நேரத்தில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து உள்ள ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்தி முடித்து உள்ளார். இந்நிலையில், தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ராமதாஸ், கும்பகோணத்தில் இன்று நடக்கும் மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழுவில் கலந்து கொள்கிறார். இதனால், வியாழன் தோறும் தைலாபுரத்தில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று நடக்காது.