அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேனரை அகற்றி கோஷம் பஸ்சை வழிமறித்து டாப்பில் ஏறி பாமகவினர் அட்டூழியம்: பயணிகள் அலறல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவரது ஆதரவு பாமகவினர் பஸ்சை வழிமறித்து நிறுத்தி டாப்பில் ஏறி நின்று கோஷமிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அங்கிருந்த ராமதாஸ் பேனரை அகற்றி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் நகராட்சி திடலில், பாமக சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் அன்புமணி எம்.பி. பேசுகையில், ‘வன்னியர்கள் தனிப்பெரும் சமுதாயமாக இருக்கிறோம். வன்னியர்கள் பங்களிப்பு 18 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு 18 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும். 10.5 என்பது முதல்கட்டம். வேறு வழியில்லாமல் அன்று ஒத்துக்கொண்டோம். அடுத்ததாக சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த உள்ளோம். பின்னர் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம், என்றார்.
எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம், வழக்கறிஞர் பாலு, மாவட்ட நிர்வாகிகள் பாலசக்தி, தங்கஜோதி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக இளைஞர்கள் சென்னை-திருச்சி சாலையில் செல்லும் பேருந்துகளை வழிமறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். மேலும் பேருந்துகளின் டாப்பில் ஏறியும் கொடியை வைத்து அசைத்து கோஷமிட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் அலறினர். இதுதொடர்பாக பாமகவைச் சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதேபோல் பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை அருகே இருந்த திமுக பேனர்களை பாமகவை சார்ந்த இளைஞர்கள் முழுவதுமாக கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவர் படங்களுடன் கூடிய பேனர் முதலில் வைக்கப்பட்டிருந்தது.
அன்புமணி மேடைக்கு வருவதற்கு முன்பு அந்த பேனரை கட்சி நிர்வாகிகள் திடீரென அகற்றி விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாமகவினர் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடி வழியாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்றனர்.
செங்குறிச்சி சுங்கச்சாவடியில் திரண்ட பாமக நிர்வாகிகள் கோஷமிட்டு பட்டாசு வெடித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளுந்தூர்பேட்டை போலீசார், வாகனங்கள் செல்லும் இடத்தில் நடுரோட்டில் எதற்கு பட்டாசு வைக்கிறீர்கள் என கேட்டதால் பாமக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாகனங்களும் டோல்கேட் பகுதியில் நிறுத்தப்பட்டு 500க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் டோல்கேட் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
* ராமதாஸ் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு
அன்புமணியின் ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பங்கேற்க மாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆதரவாளர்களும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய கூட்டம் வராததால் பிற்பகல் 12 மணிக்கு மேடையில் நிர்வாகிகள் பேச தொடங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
* வன்னியர் சங்க கொடி இறக்கி பாமக கொடி ஏற்றம்
வன்னியர் சங்க கொடிகளே அனைத்து இடங்களிலும், ஆர்ப்பாட்ட திடலிலும் மேடையிலும் முதலில் காணப்பட்டன. அன்புமணி வருகைக்கு முன் திடீரென மேடையின் உச்சியில் இருந்த வன்னியர் சங்க கொடி இறக்கப்பட்டு, பாமக கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அதன் அருகே வன்னியர் சங்க கொடியும் வைக்கப்பட்டது.
தந்தை, மகன் மோதலின்போது ஒட்டுமொத்தமாக வன்னியர் சங்கம் ராமதாசுக்கு கைகொடுத்தது. இதனால் அன்புமணி தரப்பு சங்கத்தை சற்று ஓரம் கட்டி, கட்சியை முன்னிலைப்படுத்தி வருவதாகவும், அவர் உத்தரவின்படியே வன்னியர் சங்க கொடி இருந்த இடத்தில் பாமக கொடி ஏற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.