அன்புமணி எதிர்த்தவருக்கு பதவி வழங்கிய ராமதாஸ் ஜி.கே.மணியின் மகன் மீண்டும் பாமக இளைஞர் சங்க தலைவரானார்
திண்டிவனம்: அன்புமணி எதிர்த்த நிலையில் பாமகவில் மீண்டும் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கி உள்ளார். பாமகவில் அன்புமணியை கட்சி தலைவராக ராமதாஸ் நியமித்தபோது அவர் வகித்து வந்த மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கினார். ஆனால் இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்குமரன் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டே ஒதுங்கியிருந்தார்.
பின்னர் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் நடந்தபோது ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, மேடையிலேயே மைக்கை தூக்கிபோட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் தொடங்கியது. இதைதொடர்ந்து மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பாமக இரண்டாக உடையும் சூழல் உருவானது. தற்போது ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியுமாக பாமக செயல்பட்டு வருகிறது. அன்புமணியின் செயல் தலைவர் பதவியை மட்டுமின்றி அவரை பாமகவில் இருந்தே ராமதாஸ் நீக்கிய நிலையில், பாமகவில் மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியும், செயல் தலைவர் பதவியும் தொடர்ந்து காலியாகவே உள்ளது. இதில் செயல் தலைவராக ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் வகையில் அவருக்கு கட்சி நிகழ்வுகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாமக கவுரவ தலைவரான ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனுக்கு மீண்டும் மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை ராமதாஸ் தற்போது வழங்கி உள்ளார்.திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அதற்கான கடிதத்தை மூத்த மகள் காந்தியுடன் சேர்ந்து தமிழ்குமரனிடம் வழங்கி வாழ்த்தினார். பாமகவினர் அவருக்கு பேராதரவு தர வேண்டுமென ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
முகநூலில் அவதூறு போடுபவர்களுக்கு பதவி; ராமதாஸ் வேதனை
‘‘முகநூலில் என்னை பற்றி கேவலமாக எழுதுகின்றனர். உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த மாதிரி தாறுமாறாக பதிவு போட்டா, எழுதினா நீங்கள் அதை கண்டியுங்கள். அதற்கும் ஒரு குறளை திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய்கவர்ந் தற்று... என்று. முகநூலில் கேவலமாக எழுதுறது, அதிலும் கேவலத்திலும் மிக கேவலமாக எழுதுவது. ராமசாமி என்பவர் உயிரோடு இருக்கிறார். அவர் செத்து போய்விட்டார் என்று பேஸ்புக்கில் போட்டால் எப்படி இருக்கும். ஒரு கதை சொல்றேன்... என்ன கதைன்னா... தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு பையன் முகநூலில் என்ைன துண்டை போட்டு இறுக்கனும், தலையணை வைத்து முகத்தை அமுத்தனும் என்று பதிவு போட்டுள்ளார். அவருக்கு இளைஞர் சங்கத்தில் ஒரு பதவி. என்னுடைய கட்சியில் கிடையாது.
இப்படி ஒரு மாதம், 2 மாதமாக அக்கப்போரா, அபத்தமா, அசிங்கமா, அருவருக்கத்தக்க பதிவுகள் தினமும் எழுதுவதை சிலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள்கூட பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட இந்த சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, செல்போன் இதற்காகவா கண்டுபிடித்தோம். இந்த மாதிரி மேலை, கீழை நாடுகள் எல்லாம் கேவலமாக போடுவதற்கு கண்டுபிடிக்கல. அதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் எல்லாம் இவற்றை பார்த்தா வெட்கிக் தலைகுனிவார்கள்’’ என்று தெரிவித்தார்..
* முதல்வர் குறித்து பேச்சு விஜய் அக்கப்போர் ஆசாமி
கரூர் விவகாரத்தில் தமிழக முதல்வர் அன்று நள்ளிரவே கரூருக்கு போனார். அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது?.
ராமதாஸ்: ஒரு முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்திருக்கிறார்.
மரக்காணம் கலவரத்தில் சம்பந்தப்படாத தாங்கள் கைது செய்யப்பட்டீர்கள்?. அன்றைய அரசு உங்களை கைது செய்தார்கள். ஆனால் 41 பேர் பலியானபோது அந்த தலைவர் அங்கு இருந்துள்ளார். ஆனால் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கவில்லையே?.
ராமதாஸ்: இதுபோன்ற சிக்கலான கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள்?.
விஜய், சம்பவம் நடந்த பிறகு 3 நாள் கழித்து ஒரு வீடியோ வெளியிடுகிறார். அதில் சி.எம்.தான் காரணம் என்பது போன்று சொல்லியிருக்கிறாரே?.
ராமதாஸ்: சி.எம். எப்படி காரணமாக முடியும். அதுதான்... இதுபோன்ற அக்கப்போர் ஆசாமிகள் போடுகிற தவறான பதிவுகளால்தான்... பொதுவாக இந்த மாதிரியான டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பார்க்கவே மக்கள் பயப்படுகிறார்கள்.