அன்புமணி தான் பாமக தலைவர்.. உரிய விசாரணைக்கு பிறகு அங்கீகாரம் வழங்கவேண்டும்: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்!!
டெல்லி: டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக இரண்டாக பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது. பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ள ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், பாமக கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு கடிதம் அன்புமணி ராமதாசுக்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், அன்புமணி ராமதாஸை பாமக கட்சியின் தலைவராக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி இருப்பதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்து இருந்தார். இது பாமக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது. பாமக எம்.எல்.ஏ. அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர் ஆகியோர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை இன்று காலை சந்தித்தனர். அப்போது, தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுக்கியிருப்பது ஏற்புடையதல்ல. உரிய நடைமுறை இல்லாமல் அன்புமணிக்கு கடிதம் அளித்தது தவறு; அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மேலும், உரிய விசாரணை அடிப்படைக்கு பிறகு அங்கீகாரம் வழங்கவேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.