நாகர்கோவில் : குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் அரசு முதன்மை செயலர், குமரி மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் வருடம் தோறும் பேச்சிப்பாறை உட்பட கோதையாறு பாசன அணைகளில் இருந்து ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு பாசனம் நடைபெறுகிறது. மே மாதம் 2வது வாரமே நாற்றங்கால் தயார் செய்து கன்னிப்பூ விவசாயம் ஆரம்பித்து விடும். இந்த வருடமும் அனந்தனார் சானல் உட்பட அனைத்து சானல்களிலும் சரியான நேரத்தில் விவசாய பணிகள் தொடங்கியது.
அனந்தனார் சானலில் உள்ளிமலை ஓடையில் புனரமைப்பு பணிகள் செய்வதாக கூறி தண்ணீர் வழங்கும் தேதியை மாற்றி மாற்றி இழுத்தடித்ததால் அணை திறந்து 45 தினங்களுக்கு பிறகுதான் வயல்களுக்கு தண்ணீர் வந்தது.இதனால் பெரும்பாலான பகுதிகளில் நாற்றுக்கள் முற்றியதுடன் சில பகுதிகளில் பயிர்கள் கருகின.
விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பணத்தையும் இழந்ததால், இழப்பீடு கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடுத்தனர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள் இழப்பீடு தரவிடாமல் தடுப்பதிலேயே குறியாக உள்ளனர். 16ம் நாள் நாற்றுக்களை பிடுங்கி நடுவதற்கு பதிலாக, வயது மூப்பு அடைந்த நாற்றுக்களை நட்டுள்ளதால் மகசூல் குறையும். ஏற்கனவே நடவு செய்த நாற்றுக்கள் கருகி விட்டன.
அதனால் மீண்டும் பயிர் செய்ய விவசாயிகளுக்கு வீண்செலவு ஏற்பட்டது. இதனால் கன்னிப்பூ அறுவடை தாமதமாகும். மேலும் மழைக்காலத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலைமையும், மழையில் நெல் மணிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையும் ஏற்படும், 2ம் போக கும்பப்பூவும் தாமதமாகும்.
இதனால் மார்ச், ஏப்ரல் மாதம் வரை சானல்களில் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பிப்ரவரி 28ல் அணைகள் மூடப்படுவதால் கும்பப்பூவும் தண்ணீரின்றி பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக 2 போகத்திலும் இழப்பு ஏற்படும்.
ஏப்ரல் வரை சானல்களில் தண்ணீர் எடுத்தால் கூட சானல் தூர்வாருதல் போன்ற பணிகள் செய்ய முடியாமல் போகும். இதன் காரணமாக அடுத்த வருடமும் கடைவரம்பு வரை தண்ணீர் வழங்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படும்.
எனவே அனந்தனார் சானலில் தாமதமாக தண்ணீர் வழங்கியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாசன மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேச பிள்ளை, தாணுபிள்ளை, அருள், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் செண்பக சேகரபிள்ளை, விஜி, தேவதாஸ், வருக்கத்தட்டு தங்கப்பன், ராதாகிருஷ்ணன், ரவீந்திரன் உடனிருந்தனர்.