ஆனைமலை: ஆனைமலை அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஓடையக்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில், சில வாரத்திற்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் கேமரா வைத்து கண்காணித்தனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ஓடையக்குளம் குப்புச்சிபுதூரில் உள்ள விவசாய தோட்டத்தில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில், இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பதிவாகியிருந்தது.
அங்கு ‘சிறுத்தை நடமாட்டம் உறுதியானதால், இரவு நேரத்தில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று, சிறுத்தை நடமாட்டம் இருந்த இடத்தில் கூண்டு வைக்கப்பட்டதுடன், இரவு பகலாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
