*பள்ளி மாணவர்கள் அசத்தல்
செய்யாறு : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு `பசுமையும் பராம்பரியமும்’ என்ற கருப்பொருள் அடிப்படையில் கலைத்திருவிழா போட்டிகள் நேற்று(14ம் தேதி) முதல் நாளை(16ம் தேதி) வரை நடைபெறுகிறது.அதன்படி, செய்யாறு அடுத்த அனக்காவூர் வட்டார வளமையத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சல்சா தலைமை தாங்கி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் தமிழரசி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அனக்காவூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு செய்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுனர்கள் உதயசங்கர், மேனகாதேவி ஆகியோர் செய்தனர்.
செங்கம்: புதுப்பாளையம் வட்டார வளமையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தது. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் சம்பத், இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாட்டின் தொன்மை, சிறப்பு, பாரம்பரியம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் ஒப்புவித்தல் போட்டி, கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, மெல்லிசை பாடல்கள், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், செவ்வியல் இசை, வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், பொம்மலாட்டம், பறை இசை, வீதி நாடகம் ஆகியவற்றில் மாணவர்கள் பங்கேற்று அசத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர் சின்னராஜி செய்திருந்தார். ஆசிரியர் பயிற்றுநர் ஜம்புகுமார் நன்றி கூறினார்.
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு டோமினிக் சாவியோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய கலைத்திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா முருகன், திமுக நகர செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
முதல் நாளில் சேத்துப்பட்டு வட்டாரத்தை சேர்ந்த 69 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வட்டார கல்வி அலுவலர் கமலக்கண்ணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கலாசி, பள்ளி தலைமை ஆசிரியர் ரபேல் ராஜன், ஒருங்கிணைப்பாளர் குமாரசாமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணன், கதிரவன், குமார், மங்களம் ரமேஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.