ஆனைமலை கோழிக்கமுத்தி முகாமில் இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இந்தியாவின் இரண்டாவது பாகன் கிராமத்தை திறந்து வைத்து, 6 நபர்களுக்கு காவடி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக ரூ.5.40 கோடி செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் இந்தியாவின் முதல் யானை பாகன் கிராமம் 13.5.2025 அன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, யானைகளின் பராமரிப்பு மற்றும் தோழமைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளின் தன்னலமற்ற சேவை அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக ரூ.5.40 கோடி செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானைபாகன் கிராமத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றில் காலியாகவுள்ள காவடி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, வனத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.