கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றை கண்ணாடி கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர். சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், சிறுத்தை, புலி, கரடி, யானை, மான்கள் மற்றும் மனித குரங்கு உள்பட பல விலங்குகளும் ஏராளமான பறவைகளும் உள்ளன. இவைகளை கண்டு ரசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில், பூங்காவில் மஞ்சள் அனகோண்டா பாம்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பாம்பு நேற்று காலை 10 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த மஞ்சள் நிற அனகோண்டா கடந்தாண்டு 9 குட்டிகளை ஈன்றது. இங்குள்ள மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றது. தற்போது மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளதால் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனகோண்டா குட்டிகளை தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.