மதுரை : அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மதுரை உள்பட 6 கோட்டங்களில் உள்ள 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.இந்தியாவில் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைக்க ரயில்வே அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக, அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், நாட்டில் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டன.
அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள மதுரை, சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.881.42 கோடி மதிப்பீட்டில், 125 திட்டமதிப்பீடுகள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன.
இதன்படி ரயில் நிலையங்களில் பல்வேறு ரூ.716.84 கோடி மதிப்பிலான 104 திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதியளித்து, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் ஒருவர் கூறும்போது, ‘‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி, அரக்கோணம், ஈரோடு, கரூர், கோவை வடக்கு, தஞ்சாவூர், தென்காசி, மதுரை, நாகர்கோவில் சந்திப்பு உள்ளிட்ட 60 ரயில் நிலையங்கள், கேரளாவில் சொரனூர், தலைச்சேரி, குட்டிப்புரம் உள்பட 26 நிலையங்கள், புதுச்சேரியில் மாஹி, காரைக்கால் ஆகிய 2 நிலையங்கள், கர்நாடகாவில் மங்களூரு, ஆந்திராவில் சூலூர்பேட்டை நிலையம் என மொத்தம் 90 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் கீழ் மதுரை, பழநி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
பயணியர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் தளம், கடைகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளில் பல இடங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ரயிலில் இருந்து ஏறி, இறங்க மிக சிரமம் அடைந்து வருகின்றனர். சிலர் ரயில் தண்டாவளத்தில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, ரயில் வேயில் நடக்கும் அடிப்படை பணிகளை வேகப்படுத்த வேண்டும். முடித்த பணிகளை விரைவில் திறக்க ஒன்றிய அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும்’’, என்றார்.