அமராவதியில் 8 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு; ஆந்திராவில் மோந்தா புயல் பேரழிவால் ரூ.6,384 கோடி இழப்பு: ரூ.901 கோடி உதவி கேட்டு அரசு கோரிக்கை
திருமலை: அந்திர மாநிலத்தில் மோந்தா புயல் காரணமாக சமீபத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், மோந்தா புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக மத்திய குழு நேற்று ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்தது. மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் பசுமி பாசு மற்றும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இயக்குநர் கே.பொன்னுசாமி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு நேற்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் ஆந்திரா மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் மோந்தா புயல் ரூ.6,384 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளதால், ரூ.901.4 கோடி உடனடி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து கங்கிபாடு மண்டலம், புண்யபாடு கிராமத்தில் புயலால் சேதமடைந்த நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

