பம்பை ஆற்றில் அமீபா வைரஸ் இருக்காது சபரிமலை பக்தர்களுக்கு அச்சம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சேலம்: பம்பை ஆற்றில் அமீபா வைரஸ் இருக்காது. இதனால் சபரிமலை பக்தர்களுக்கு அச்சம் வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சபரிமலை ஆன்மீக சுற்றுலாவுக்கும், அமீபா பரவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மூளையை திண்ணும் அமீபா பரவல் கேரளாவில் சமீபமாக இருந்து வருகிறது. இதற்கு, கேரளாவில் உள்ள குளங்கள், குட்ைடகள், நீண்ட நாட்களாக தேங்கியுள்ள மாசு படிந்த தண்ணீர், சேறு அதிகமாக உள்ள தண்ணீரில் இருக்கும் வைரஸ் தான் காரணம். அதில் குளிக்க செல்லும் போது, மூக்கின் வழியே வைரஸ் பரவி மூளையை பாதிக்கிறது. இதனால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு, இறப்பு வரை செல்கிறது.
அதுவும் மூளையை திண்ணும் அமீபா எனும் பாதிப்பு, ஆற்றில் செல்லும் தண்ணீரில், பம்பை ஆற்றில் இருக்காது. நீச்சல் குளத்தை பல ஆண்டுகளுக்கு சுத்தப்படுத்தாமல் விட்டுவிட்டால் கீழே பாசி படிந்து தண்ணீர் மாசடைந்து இருக்கும். அவற்றில் இதுபோன்ற வைரஸ் உருவாகும். கேரளாவில் நிறைய குளம், குட்டைகள் உள்ளதால், அதில் குளிக்கும் பழக்கம் அந்த மக்களுக்கு உள்ளதால், ஓரிரு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பாதுகாப்பு அதிகம் உள்ளது. அது தொற்று நோயும் இல்லை. பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் கூட மாசு படிந்த குளம், குட்டைகள், அழுக்கு படிந்த தண்ணீரில் குளிக்க கூடாது. பாதுகாப்பாக இருப்பது நல்லது.


