அமமுக நிர்வாகி ஜெகன் கொலை வழக்கில் சிங்கப்பூரில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது: போலீசாரிடம் பகீர் வாக்கு மூலம்
அண்ணாநகர்: திருவாரூர் மாவட்டம் கோலவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(48). இவர் சென்னை நொளம்பூர் ரெட்டிபாளையம் பகுதியில் மீன் கடையை நடத்தி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு மீன் கடையில் தனியாக இருந்தபோது காரில் வந்த கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து கொலை தொடர்பாக 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்கப்பூர் குமார் என்பவர் சிங்கப்பூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நொளம்பூர் போலீசார், அந்த நபருக்கு லூக் அவுட் நோட்டீஸ் கொடுத்து அனைத்து விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் வழங்கினர்.
இந்த நிலையில்நேற்றுமுன்தினம் சிங்கப்பூர் புவனேஸ்வர் ஏர்போட்டில் வைத்து சிங்கப்பூர் குமாரை அதிகாரிகள் கைது செய்து நொளம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அழைத்து செல்லும்படி தெரிவித்து உள்ளனர். இதையடுத்து புவனேஸ்வர் ஏர்போர்ட்டுக்கு நொளம்பூர் போலீசார் சென்று குமாரை கைது செய்து உடனடியாக நொளம்பூர் காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.
போலீசாரிடம் சிங்கப்பூர் குமார் கூறியதாவது; சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவிலூர்பட்டி கிராமம். அடிக்கடி சிங்கப்பூருக்கு சென்று வருவதால் சிங்கப்பூர் குமார் என்று அனைவரும் அழைத்தனர். கொலை செய்யப்பட்ட அமமுக நிர்வாகி ஜெகனுக்கும் அந்த பகுதியில் உள்ள ஒன்றிய கவுன்சிலராக இருந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ராஜேஷை வெட்டி கொலை செய்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக ஜெகன் தலைமறைவானார்.
எப்படியாவது ஜெகனை பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்யவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தோம். கடைசியாக முகப்பேர் பகுதியில் மீன் கடை நடத்தி வருவது தெரியவந்ததும் பல நாட்கள் நோட்டமிட்டு கடையில் தனியாக இருந்தபோது ஜெகனை வெட்டிக்கொன்றோம். இதன்பிறகு போலீசாரிடம் சிக்காமல் இருக்க சிங்கப்பூருக்கு சென்றுவிட்டேன். இவ்வாறு சிங்கப்பூர் குமார் தெரிவித்துள்ளார்.ஜெகன் கொலை வழக்கு தவிர சிங்கப்பூர் குமார் மீது மேலும் சில கொலை வழக்கு, அடிதடி வழக்குகள் உள்ளது. இதையடுத்து சிங்கப்பூர் குமாரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.