Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமித்ஷாவுடன் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை 15ம் தேதிக்கு பிறகு நினைப்பது நடக்கும்...நல்லது நடக்கும்... செங்கோட்டையன் உறுதி

கோபி: வரும் 15ம் தேதிக்கு பிறகு நீங்கள் நினைப்பது நடக்கும் என்றும், நல்லதே நடக்கும் என்று செங்கோட்டையன் உறுதியளித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வலியுறுத்தி கடந்த 5ம் தேதி செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். அதைத்தொடர்ந்து 6ம் தேதி செங்கோட்டையன் வகித்து வந்த கழக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சத்தியபாமா, உட்பட 13 பேரின் கட்சி பதவிகளைபறிததும், அத்தாணி பேரூர் கழக துணைச்செயலாளர் மருதமுத்து உள்ளிட்ட 2 பேரை அடிப்படை உறுப்பினர் கட்சியில் இருந்து டிஸ்மிசும் செய்தார். தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திரும்பினார்.

இந்நிலையில் நேற்று குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், முதலில் வெள்ளாங்கோயில் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் செங்கோட்டையன் வீட்டிற்கு சென்றனர்.

அவர்களிடம் சுமார் அரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து கோபி நகர நிர்வாகிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் அவரது வீட்டிற்கு சென்றனர். அவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது வரும் 15ம் தேதிக்கு பிறகு நீங்கள் நினைப்பது நடக்கும் என்றும், நல்லதே நடக்கும் என்றும் கூறி உள்ளார்.

* ‘நான் கூறிய கருத்துக்கு எனக்கு நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும்’

கோபியில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருமண நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அடுத்த கட்ட நகர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ‘‘எனது பணியை என்றைக்கும் போல் செய்து வருகிறேன். என்னை பொறுத்தவரை பல கேள்விகள் கேட்கிறீர்கள். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்கின்ற வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அதற்கு காலம்தான் பதில் சொல்லும். என்னால் இன்றைக்கு பதில் சொல்ல இயலாது. நீண்ட நாள் இந்த இயக்கத்தில் இருக்கிறேன்.

நான் கூறிய கருத்துக்கு எனக்கு ஜனநாயக முறைப்படி நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். 15 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் என்னுடைய வேதனை’’ என்றார். வயிற்று எரிச்சல் பிடித்தவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என உதயகுமார் கூறியிருப்பது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், ஊர் ஒன்று கூடினால் தான் தேர் இழுக்க முடியும் என்றார். அமித்ஷாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

* செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஈரோட்டில் போஸ்டர்கள்

அதிமுக இணைப்பு தொடர்பாக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்ட பின்னர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் நேற்று முதன்முறையாக அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஓபிஎஸ் அணியான அதிமுக உரிமை மீட்பு குழு ஈரோடு மாநகர் பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் அதிமுக ஒன்றினைய வேண்டும், 2026ல் ஆட்சி அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

* 15 நாட்களில் ஒன்றிணைவோம்: ஓபிஎஸ் அணி நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் அணி அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் நேற்று செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘செங்கோட்டையன் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்கின்றோம். 15 நாட்களுக்குள் ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவார்கள்’’ என்றனர்.