வேலூர்: வேலூரில் பாஜ முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருவது எங்களுக்கு புத்துணர்ச்சி தரும். எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணிக்கு சீமான், விஜய்யை அழைத்தது அவரின் நிலைப்பாடு. அவர் ஒன்றும் தவறாக சொல்லவில்லை.
எங்கள் கூட்டணியில் எந்த குழம்பமும் இல்லை தெளிவாக உள்ளது. தமிழகத்தில் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி ஆட்சி குறித்து எங்கள் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள். தமிழ்நாடு தேர்வாணையத்தில் குரூப் 4 குளறுபடி இருப்பதாக புகார் எழுகிறது.
இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். மறுபரிசீலனை செய்ய வேண்டும். துணை ஜனாதிபதி விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்தவர் துணை ஜனாதிபதியாக வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, ‘அதை சொல்லக்கூடிய இடத்தில் நான் இல்லை’ என்று தமிழிசை தெரிவித்தார்.