Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமித் ஷாவின் தலையை வெட்ட வேண்டும்: சர்ச்சை பேச்சால் திரிணாமுல் பெண் எம்பி மீது வழக்கு

ராய்பூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது சட்டீஸ்கரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் வங்கதேச நாட்டினர் ஊடுருவுவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசுதான் காரணம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், எல்லைப் பாதுகாப்பு என்பது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு என்றும், ஊடுருவல் நடந்தால் அதற்கு மாநில அரசைக் குறை சொல்ல முடியாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, ‘எல்லைகளை யாரும் பாதுகாக்கவில்லை என்றால், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மீது கண் வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் தினமும் இந்தியாவிற்குள் வந்து நமது நிலத்தை அபகரிக்கிறார்கள் என்றால், முதலில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்டி மேசையில் வைக்க வேண்டும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்காக மஹூவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு பாஜக தலைவர்களும், ஒன்றிய அமைச்சர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள மனா காவல் நிலையத்தில் உள்ளூர்வாசி ஒருவர் அளித்த புகாரின் பேரில் மஹூவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 196 (மதம், இனம், பிறந்த இடம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல்) மற்றும் 197 (தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான குற்றச்சாட்டுகள்) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.