புதுடெல்லி: புதிய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அவரது செயலாளராக 1985ம் ஆண்டு பேட்ச் ஜார்க்கண்ட் கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரேவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நேற்று அறிவித்துள்ளது. அமித் கரே 3 ஆண்டுகள் செயலாளராக பதவி வகிப்பார்.
டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற கரே, ஐஐஎம் அகமதாபாத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
பீகாரின் மாட்டுத் தீவன ஊழலை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர். 2018 மே 31ல் ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் செயலாளராக பதவியேற்ற அவர் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, உயர்கல்வி துறைகளின் செயலாளராக பணியாற்றி உள்ளார்.கடந்த 2021 முதல் பிரதமரின் ஆலோசகராக உள்ள கரே, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ வகுத்து செயல்படுத்திய முக்கிய குழுவிலும் இடம் பெற்றிருந்தவர்.