Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமிதாப் மாமாக்கு கோவம் வந்துருச்சு என்கிறார்: wiki யானந்தா

‘‘தனி மரம் தோப்பாகுமா என நையாண்டி பேசுறாங்களாமே இலைக்கட்சிக்காரங்க தெரியுமா..’’ என கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘குக்கர்காரர் நீண்ட நாட்களுக்கு பிறகு அல்வா மாவட்டத்திற்கு விசிட் அடிச்சிருக்காரு.. நிருபர்களை சந்தித்த அவர், நாங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தினாராம்.. அதுமட்டுமல்லாது கூட்டணி ஆட்சி தான் என்று அழுத்தம், திருத்தமான தனது கருத்தை வெளிப்படுத்தினாராம்.. தமிழ்நாடு வந்த பிரதமரை நீங்கள் சந்திக்கவில்லையே என கேட்டதற்கு, நான் பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனக் கூறி ஒதுங்கிக் கொண்டாராம்..

என்னதான் மலராத தேசிய கட்சி - இலை கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் ஒட்டும், உறவும் இல்லாமல் தான் இருக்காம்.. இதனால் உஷாராக இருந்த பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தின் போது சேலம்காரரை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கி இருக்கிறாரு.. தேனிக்காரரை முதலில் அணைத்து அருகில் வைத்திருந்தாலும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட போதும் கொடுக்காமல் உதறித் தள்ளி விட்டாராம்.. அதனால் தான் குக்கர்காரர் நேரம் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டார் என்கின்றனர் இலை கட்சியினர். அதோடு இல்லாமல் தான் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார் குக்கர்காரர்.

சேலம்காரரோ அதிமுக கூட்டணியில் இப்போது பாஜ மட்டுமே இடம்பெற்றுள்ளது என கூறியுள்ள நிலையில் கூட்டணியிலேயே இடமே இல்லாத குக்கர்காரரை ‘தனி மரம் தோப்பாகுமா’ என நையாண்டி செய்கின்றனராம் இலை கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எஸ்பி தனிப்பிரிவுல த்ரி ஸ்டார் காக்கிய நியமிச்சாத்தான் டிபார்ட்மெண்ட் கட்டுக்கோப்பா இருக்கும்னு காக்கிகளே பீல் பண்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் சரகத்துல பல காரணங்களுக்காக வெயிலூர், மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை, கிரிவலம் மாவட்டங்கள்ல பணிபுரிஞ்சு வந்த எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செஞ்சாங்க..

இதுல குயின்பேட்டை, கிரிவலம் மாவட்டங்கள்ல மட்டும் எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்களை நியமிச்சிருக்காங்க.. அதேபோல, வெயிலூர், மிஸ்டர்பத்தூர் மாவட்டங்கள்ல எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படாம இருக்குறாங்க.. இதனால, எஸ்ஐ ரேஞ்ச் தனிப்பிரிவு அதிகாரிங்கதான் மாவட்டத்துல இருக்குற ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள்னு சட்டம்- ஒழுங்கு பிரச்னைய விசாரிச்சு மாவட்ட தலைமை காக்கிகளுக்கு தெரிவிக்க வேண்டியிருக்குது.. சில காக்கிகள் 2 ஸ்டார் காக்கிகள் கிட்ட தகவலை சொல்றாங்க.. சில பேர் ஈகோ பார்க்குறாதாக சொல்றாங்க..

சில நேரங்கள்ல 2 ஸ்டார் காக்கிகள் உயர் அதிகாரிகள் கிட்ட கேட்கவும் தயங்க வேண்டியிருக்குறதாக பேசிக்கிறாங்க.. காக்கிகள் வட்டாரத்துல உயர் அதிகாரிகள் கிட்ட ஈகோ இருக்கத்தான் செய்யும். எஸ்பி தனிப்புரிவு இன்ஸ்பெக்டர்கள் இருக்கும்போதே, சில பேரு ஈகோ பார்ப்பாங்களாம்.. 2 ஸ்டார் காக்கிகள் கிட்ட சொல்லவா வேணும்.. அதனால புதுசா வந்திருக்குற சரக அதிகாரி, வெயிலூர், மிஸ்டர் பத்தூர் மாவட்டங்கள்ல எஸ்பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரை நியமிக்க நடவடிக்கை எடுக்கணும்..

இன்ஸ்பெக்டருக்கு பதில், எஸ்பி தனிப்பிரிவு டிஎஸ்பிக்களாகவும் நியமிச்சா காக்கிகள் டிபார்ட்மெண்ட் கட்டுக்கோப்பாக இருக்கும்னு காக்கிகளே பீல் பண்ணி பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எச்சம் பதுக்கிய முக்கிய புள்ளி பற்றிய ரகசியத்தை காக்குறாங்களாமே காக்கிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘குட்டி பிரான்ஸ் எனப்படும் புதுச்சேரியில் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் திமிங்கல எச்சம் பதுக்கல் ஜரூராக நடக்கிறதாம்.. இரு மாநில கடலோர பகுதி என்பதால் துறைமுகம் வழியாக கடத்தல் தீவிரமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளதாம்..

அண்டை மாநில நுண்ணறிவுக்கு ரகசிய தகவல் கிடைக்க, எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினராம்.. சில கண்டிப்புகளுடன் தொழிலதிபர் அனுமதி தர, காக்கி துறையில் ஒருவர் மாத்திரம் மப்டியில் வீட்டிற்கு சென்றாராம்.. எச்சத்தை கொண்டு வந்து அதிபரும் முன் வைக்க வெளியே பதுங்கியிருந்த நுண்ணறிவு படை சுற்றிவளைத்ததாம்.. பிடிபட்ட அதிபரிடம் துருவிதுருவி விசாரிக்க, புதுச்சேரி பாய் ஏரியாவான சுல்தான்பேட்டையில் பிரபல புள்ளிக்கு முக்கிய தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்ததாம்..

விலை மதிக்க முடியாத திமிங்கல எச்சத்தை பதுக்கி வாசனை திரவியங்கள் தயாரிப்பதோடு, விற்பனையிலுல் ஈடுபட்டது அம்பலமானதாம்.. இதனால் ரகசிய கண்காணிப்பு வளையத்திற்குள் அந்த நபர் கொண்டு வரப்பட்டு இருக்க, முக்கிய புள்ளியானவர் சிக்கினால் மட்டுமே சர்வதேச கும்பலுடனான தொடர்பு குறித்த முழு விவரங்கள் தெரிய வருமாம்.. இதனால் ரகசியம் காக்க காக்கிகள் தாரக மந்திரத்தை கடைபிடித்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேனிக்காரருக்கு திடீர்னு கோபம் வந்ததற்கான காரணம் என்னவாம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியுடன் கூட்டணியில் இருந்த நேரத்தில் டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தனது அருகில் இலைக்கட்சி தலைவரை நிற்க வைத்து போட்டோ எடுத்தாராம் பிரதமர்.. ஆனால் சென்னை திரும்பியதும் இலைக்கட்சி தலைவர் கூட்டணியில் இருந்து வெளியே வந்துட்டாராம்.. ஆனால் தேனிக்காரரோ டெல்லியை முழுமையாக நம்பி இன்று வரை கூட்டணியில் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம் என சொல்லிக்கிட்டு இருந்தாரு.. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில் ஒன்றிய உள்துறை மந்திரி தமிழ்நாடு வந்தாராம்..

அப்போது நடந்த நிகழ்ச்சிக்கு இந்த தேனிக்காரரை அழைக்கலையாம்.. அதிலிருந்தே அவர் மனம் கசந்துட்டாராம்.. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது இனிமேலும் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்ற எண்ணம் மேலோங்கிற்றாம்.. இருந்தாலும் ஒன்றிய அரசு மேல்சபை எம்பியாக்கி மந்திரியாக்குவாங்கன்னு எதிர்பார்த்தாராம்.. அதுவும் நடக்கலையாம்.. இந்த நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்த பிரதமரை பார்க்கவும் தேனிக்காரருக்கு அனுமதி வழங்கலையாம்..

இதனால அவமானத்தின் உச்சத்திற்கு சென்ற அவர் மிகவும் மனசொடிஞ்சு போனாராம்.. இவர்களை நம்பி வந்த தனக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போச்சுது.. இனிமேலும் இங்கிருப்பது பெரும் இழுக்காகி போயிடும் என்ற நிலைக்கு வந்துட்டாராம்.. அதனால் சினம் என்றால் என்னவென்றே தெரியாத தேனிக்காரருக்கு திடீரென கோபம் பொத்துக்கிட்டு வந்திருக்காம்.. தமிழக நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வரும் ஒன்றிய அரசை ஒருநாளும் கண்டிக்காத நிலையில் இப்போது திடீர் கோபம் வந்ததை எல்லோரும் கிண்டலடித்து சிரிக்கிறார்கள்.

அமிதாப் மாமாக்கு கோவம் வந்துருச்சுடோய்.. என்று அவரது ஆதரவாளர்கள் சில கலாய்க்கிறார்களாம். எனினும் அவரது அடிப்பொடிகள் சிலர் வேறுவிதமாக சொல்றாங்க.. மலராத கட்சியில் இருந்து வெளியே வருவதற்கான சரியான காரணத்தை நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம்.. ஆனால் பிரதமர் எங்களை பார்க்காமல் சென்றதன் மூலம் அதற்கான வழியை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துவிட்டார்.

அதே நேரத்தில் கடந்த மாதமே யாருடன் கூட்டணி சேர்ந்தால் தொண்டர்கள் உரிமை மீட்புகுழுவுக்கு எது நல்லது என்று கேட்டபோது, மலராத கட்சி கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் போதும் என மா.செ.க்கள் சொன்னாங்களாம்.. அதன்படியே தற்போது வெளியே வரபோகிறோம் என சொல்லி கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டல என்பதுபோன்று சிரிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.